Written by 2:24 pm Verité in the News Views: 1

இலங்கை நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட 15% உறுதிமொழிகள் ‘அறியப்படாத’ நிலையில்! : வெரிட்டே ரிசர்ச்

Published by Virakesari

சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டத்தின் கீழ் இலங்கையில் கண்காணிக்கப்படகூடிய 100 உறுதிமொழிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான தரவுகள் எதுவும் சமர்ப்பிக்கப்படாத உறுதிமொழிகளின் எண்ணிக்கை (ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவை கடந்துவிட்டாலும்), மார்ச் மாதத்தில் 9%இலிருந்து ஜூலையில் 15%ஆக அதிகரித்துள்ளது என்று வெரிட்டே ரிசர்ச்  வெளிப்படுத்தியுள்ளது.

வெரிட்டே ரிசர்ச்சின் அவதானிப்பின்படி, இந்த உறுதிமொழிகளை நியாயமாக மதிப்பீடு செய்வதற்கு போதுமான தகவல்கள் இல்லாமை, IMF திட்டத்தில் அரசாங்கத்தின் முன்னேற்றத்தை தெளிவாக காண்பதில் உள்ள சிரமத்தை எடுத்துக்காட்டுகிறது.

“அறியப்படாத” உறுதிமொழிகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன?

இத்தகவல் வெரிட்டே ரிசர்ச்சின் IMF கண்காணிப்பான் எனும் தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இது IMF திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதோடு மற்றும் சரிபார்க்கக்கூடிய அளவுகோல்களின் அடிப்படையில் “நிறைவேற்றிய”, “நிறைவேற்றப்படாத” அல்லது “அறியப்படாத” என உறுதிமொழிகளை வகைப்படுத்துகிறது.

“அறியப்படாத” உறுதிமொழிகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பு இரண்டு காரணிகளின் அடிப்படையில் இருக்கலாம் என்று வெரிட்டே ரிசர்ச் குறிப்பிடுகிறது. 

முதலாவதாக, அரசாங்கம் இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறிவிட்டு, தோல்வியை ஒப்புக்கொள்வதைத் தாமதப்படுத்தும் நோக்கில் தகவல்களை பகிரங்கப்படுத்தாமை. 

இரண்டாவதாக, இத்திட்டங்களை செயல்படுத்துவதில் பொதுமக்களையோ அல்லது பாராளுமன்றத்தையோ முக்கியமான பங்குதாரர்களாக அரசாங்கம் பார்க்கவில்லை. – மேலும், அவர்களுக்கு அத்தியாவசிய தகவல்களை வழங்குவதில் அக்கறை காட்டாமை.

இலங்கையால் தனது முன்னேற்றத்தை விரைவுபடுத்த முடியுமா?

ஜூலை மாத இறுதிக்குள், IMF திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்ட 57 உறுதிமொழிகளில் 35ஐ இலங்கை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இது ஜூன் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட 33 உறுதிமொழிகளுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றத்தை குறிக்கிறது. ஜூலை மாதம், இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் ஆகியவற்றுக்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது. இச்சட்டமூலங்கள் முறையே 2023 ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் அனுமதி பெற திட்டமிடப்பட்டவையாகும். குறிப்பிடத்தக்க தாமதத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவை மீறி இலங்கை முன்னேறி வருவதை இது காட்டுகிறது.

மார்ச் மாதத்தில், ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட 25 உறுதிமொழிகளுடன், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துக்கு ஒரு நல்ல தொடக்கத்தை வழங்கியது. பின்னர், உறுதிமொழிகளை நிறைவேற்றுவதின் சராசரி மாதத்துக்கு மூன்று வீதத்துக்கும் குறைவாகவே இருந்தது.

செப்டெம்பர் மாத இறுதிக்குள், சர்வதேச நாணய நிதியம் தனது வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வை நடத்தி இரண்டாவது தவணை நிதியை வழங்கவிருக்கும்போது, இலங்கை 71 உறுதிமொழிகளை நிறைவேற்றியிருக்க வேண்டும். 

இந்த இலக்கை அடைய, இலங்கை ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் மாதத்துக்கு 18 உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும்.

முன்னேற்றத்தை மதிப்பிடுவதில், கொள்கை தொடர்பான எந்தவொரு செயலும், அதன் இறுதித் திகதிக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகும் கூட, அதன் நிறைவு நிலையை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த தவறினால், அது நிறைவேற்றப்படாத உறுதிமொழிகளாக கருதப்படுகிறது. 

இதன் விளைவாக, அரசுக்கு சொந்தமான இரண்டு பெரிய வங்கிகள் மற்றும் மூன்று முன்னணி தனியார் துறை வங்கிகளுக்கான சொத்து மதிப்பீட்டு மதிப்பாய்வை முடிவு செய்வதாக ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழி, “அறியப்படாத” நிலையில் இருந்து “நிறைவேற்றப்படாத” உறுதிமொழியாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது. 

ஜூலை இறுதியில், மொத்தம் ஏழு உறுதி மொழிகள் “நிறைவேற்றப்படாத” உறுதிமொழிகளாக வகைப்படுத்தப்பட்டன என வெரிட்டே ரிசர்ச் குறிப்பிடுகிறது.

Visited 1 times, 1 visit(s) today

Last modified: April 26, 2024

Close