Published by Virakesari
- ஆட்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிதி வெளிப்படைத்தன்மை தளத்தை நிறுவுவதற்கான காலக்கெடு மார்ச் மாதமாக இருந்தாலும், அது இன்னும் நிறுவப்படவில்லை.
வெரிட்டே ரிசர்ச்சின் சமீபத்திய முன்னேற்றப் புதுப்பிப்பின்படி, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 17வது திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்ட 57 கண்காணிக்கப்படக்கூடிய உறுதிமொழிகளில் 38ஐ இலங்கை நிரூபணமாக ‘நிறைவேற்றியுள்ளது’.
வெரிட்டே ரிசர்ச்சின் நிகழ்நிலை தளமான ‘IMF கண்காணிப்பான்’ வழங்கும் ஆகஸ்ட் மாத இறுதிக்கான நிகழ்ச்சித்திட்டத்தின் புதுப்பித்தலுக்கு அமைய, 11 உறுதிமொழிகளின் முன்னேற்றம் இன்னும் “அறியப்படவில்லை” என்றும், அதே நேரத்தில் எட்டு உறுதிமொழிகள் “நிறைவேற்றப்படவில்லை” எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
2023 மார்ச்சில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கும், இரண்டாவது கொடுப்பனவை அங்கீகரிப்பதற்காகவும் IMF இன் குழுவொன்று இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளது. எவ்வாறாயினும், அது இப்போது மேலும் ஒக்டோபர் இறுதி வரை தாமதத்தை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் IMF மீளாய்வு, முதலில் ஜூன் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்ட உறுதிமொழிகளை மையமாகக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீடிக்கப்பட்ட காலக்கெடு இருந்தபோதிலும், ஆட்சி தொடர்பான முக்கியமான உறுதிமொழியை நிறைவேற்றுவதில் இலங்கை பின்தங்கியுள்ளது – அது என்னவென்றால் நிகழ்நிலையில் நிதி வெளிப்படைத்தன்மை தளத்தை உருவாக்குவதாகும். மார்ச் இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்ட இவ் உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
நிதி வெளிப்படைத்தன்மை தளத்தின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன? இத் தளமானது அரையாண்டு அடிப்படையில் மூன்று முக்கிய வகைகளின் கீழ் தகவல்களை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: (1) முக்கியமான பொது கொள்முதல் ஒப்பந்தங்கள் அனைத்தும், (2) முதலீட்டு சபையின் மூலம் வரி விலக்கு பெறும் அனைத்து நிறுவனங்களினதும் பட்டியல், மற்றும் (3) சொகுசு வாகன இறக்குமதியில் வரி விலக்கு பெறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியல். இவ்வகையான தளம் அரசாங்க நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன்,அரச வருவாய் செலவில் தனியார் நன்மைகளை வழங்கும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க உதவும்.
இலங்கையின் பேரண்டப் பொருளாதார மீட்சி மற்றும் உறுதிப்பாட்டுக்கு முக்கியமானதாக ஆட்சி மற்றும் ஊழல் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்ட, இலங்கைக்கான IMF இன் முதல் வேலைத்திட்டமும் இதுவாகும். அதனால்,மேற்கூறிய நிதி வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு தளத்தை நிறுவுவதற்கான உறுதிமொழியின் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பாக தோல்விக்கான காரணங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக இருக்கும் போது, IMF பெரும்பாலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிய நாடுகளிடம் மென்மையாக நடந்து கொண்ட வரலாறு உள்ளது, எவ்வாறாயினும், இந்த புறக்கணிப்பு நடவடிக்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்ற ஒன்றாகும்.
ஆட்சி தொடர்பான அர்ப்பணிப்புகளை நிறைவேற்றுவதில் தோல்விகளை IMF நிர்வாகம் கவனிக்கவில்லை என்றால், அது அதன் சொந்த மதிப்பீட்டிற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காதது போல் தோன்றலாம் – இலங்கையில் ஆட்சியை மேம்படுத்துவது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளின் தலைவிதியும் அவ்வாறே தீர்க்கப்பட வாய்ப்புள்ளது.
2023 மார்ச் 20ம் திகதி அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் IMFக்கான இலங்கையின் விருப்பக் கடிதத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டு, அடையாளம் காணப்பட்ட 100 உறுதி மொழிகளிகளை கண்காணிக்கும் இலங்கையின் முதல் மற்றும் ஒரே தளம் ‘IMF கண்காணிப்பான்’ ஆகும். இதனை manthri.lk இணையதளத்தில் https://manthri.lk/en/imf_tracker பொதுமக்கள் அணுகலாம்.
Last modified: April 26, 2024