Written by 3:57 pm Verité in the News Views: 3

பாரிய அளவிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் : இலங்கை அரசாங்கம் பொதுமக்களை தொடர்ந்தும் இருளில் வைத்திருக்கிறது!

Published by Virakesari

உட்கட்டமைப்பு கருத்திட்டக் கண்காணிப்பான் எனும் ஒன்லைன் டாஷ்போர்டின் முதலாவது கட்டத்தை வெரிட்டே ரிசர்ச் மும்மொழியில் 2022ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு ட்ரில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுள்ள 60 பாரிய உட்கட்டமைப்புக் கருத்திட்டங்கள் தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதை இந்த டாஷ்போர்ட் கண்காணிக்கிறது. 

அதன் 2023ஆம் ஆண்டுக்கான புதிய இற்றைப்படுத்தல்கள் தற்போது பதிவேற்றப்பட்டுள்ளன.

ஊழல், கொள்முதல் முறைகேடுகள், உட்கட்டமைப்பு மீதான தேவையற்ற அதிக ஒதுக்கீடுகள் போன்ற எதிர்மறையான குற்றச்சாட்டுக்களில் இலங்கையின் பாரிய அளவிலான உட்கட்டமைப்புத் திட்டங்கள் மூழ்கியுள்ளன.

இலங்கையின் கடன் சுமை கடந்த இரண்டு தசாப்தங்களில் கணிசமாக அதிகரிப்பதற்கு, இவ்வாறான திட்டங்களுக்கு நிதியளித்தமையும் அது தொடர்பான வெளிப்படைத் தன்மையின்மையும் முக்கிய காரணங்களாகும்.

2016இல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) முக்கிய அரசாங்க தகவல்களுக்கு பொதுவான அணுகலை இலகுபடுத்துவதன் மூலம் இதை மாற்ற முயற்சித்ததோடு அரசாங்கத்தை பொறுப்பேற்க பொதுமக்களுக்கு அதிகாரமும் அளித்தது. 

குறித்த சட்டத்தின் பிரிவு 9, ஐந்து பரந்த தொகுதிகளின் கீழ், ஒரு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு அந்த உட்கட்டமைப்பு திட்டத்துக்கு பொறுப்பான அமைச்சரை கட்டாயப்படுத்துகிறது.

ஐக்கிய அமெரிக்க டொலர் 100,000 அதிகமான வெளிநாட்டுக் கருத்திட்டங்கள் மற்றும் 500,000 ரூபாய்க்கு மேற்பட்ட உள்நாட்டு கருத்திட்டங்களை, அவற்றை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்னதாக குறித்த தகவல்கள் முன்கூட்டியே வெளியிடப்பட வேண்டும் என்பது RTI சட்டத்தின் முக்கியமானது. 

வெரிட்டே ரிசர்ச்சின் publicfinance.lk தளத்தின் கீழ் அமைந்துள்ள உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான் (Infrastructure Watch) மும்மொழி டாஷ்போர்டானது உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பாக RTI சட்டத்தின் கீழ் செயற்படும் வெளிப்படுத்தல் தேவைகளுக்கு அரசாங்கம் எந்தளவு இணங்குகிறது என்பதை கண்காணிக்கிறது. 

2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் 60 பாரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பாக ஒன்லைனில் தகவல்களை முன்கூட்டியே வெளிப்படுத்துவதை டாஷ்போர்ட் கண்காணித்தது.

2022ஆம் ஆண்டில், ரூபாய் 1.08 ட்ரில்லியன் மதிப்புள்ள 60 திட்டங்களின் 18 வீதமான தகவல்கள் மட்டுமே ஒன்லைனில் முன்கூட்டியே வெளியிடப்பட்டன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தகவல் அளிக்கவேண்டிய கட்டாயம் இருந்தபோதிலும், உட்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து அரசாங்கம் பொதுமக்களை தொடர்ந்தும் இருட்டில் வைத்திருப்பதை இது தெளிவுபடுத்துகிறது.

மேலும், 2023ஆம் ஆண்டில், 2019 – 2022க்கு இடையில் இலங்கை அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட 60 திட்டங்களின் 25 சதவீதமான தகவல்கள் மட்டுமே ஒன்லைனில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளன. 

கண்காணிக்கப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு ரூபாய் 2.54 ட்ரில்லியனாகும். கண்காணிக்கப்பட்ட 60 திட்டங்களின் விபரங்களை https://dashboards.publicfinance.lk/infrastructure-watch/ என்ற இணையதளத்துக்குச் சென்று பார்வையிடலாம்.

இவ்வாறு குறைவான அளவில் தகவல்  வெளியிடப்பட்டிருக்கும் அதேவேளை, இலங்கையில் பெரும்பான்மையினரால் பேசப்படும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் பெரும்பாலான தகவல்கள் கிடைக்கப்பெறாமை மேலும் ஒரு  கவலைக்குரிய விடயமாகும்.  

உண்மையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் சிங்களம் மற்றும் தமிழில் தகவல்களை வெளியிடுவதை கட்டாயப்படுத்துவதோடு, சாத்தியமானால் மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடுகிறது. இருப்பினும், நடைமுறையில் அதிகாரிகள் அதற்கு நேர்மாறாக செய்வதாகவே  தெரிகிறது.

இத்தகவல்கள் ஆங்கிலத்தில் இலகுவாக கிடைக்கப்பெறுவதாகவும், சாத்தியமானால் மட்டுமே சிங்களம் மற்றும் தமிழ் பயன்படுத்தப்படுவதாகவும் எமது கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. 

எடுத்துக்காட்டாக, 2022இல் 18% தகவல்கள் ஆங்கிலத்தில் இருந்தபோது, 5% மட்டுமே சிங்களத்திலும் 4% தமிழிலும் வெளியிடப்பட்டன. 

2023இல் இந்த போக்கு தொடர்ந்தது. அங்கு 25% தகவல்கள் ஆங்கிலத்தில் கிடைக்கின்ற அதேவேளை 8% தகவல்கள் மாத்திரமே  சிங்களத்திலும் தமிழிலும் கிடைக்கின்றன.

குறைவான தகவல் வெளிப்பாடு மற்றும் அதனால் ஏற்படும் ஒளிபுகாநிலை ஆகியவை ஊழல், முறைகேடுகள், தேவையற்ற அதிக செலவுகள் மற்றும் குறைந்த தரம் கொண்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாரிய கடன் சுமை என்பவற்றுக்கு வழிவகுக்கின்றன. 

அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில், வரி செலுத்துவோர் அதிக வரிகளுக்கு உட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில், பொது அரச  நிதியை அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை அறிய பொது மக்களுக்கு பூரண உரிமை உள்ளது.

அரச நிதி பயன்பாட்டின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல் மற்றும் காலத்துக்கேற்ற ஊழல் எதிர்ப்புச் சட்ட சீர்திருத்தங்கள் இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு முக்கியமானவை என சர்வதேச நாணய நிதியத்தால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. 

ஊழலுக்கான வாய்ப்புகளை குறைக்க ஒன்லைன் நிதி வெளிப்படைத்தன்மை தளம் மூலம் பொது கொள்முதல் ஒப்பந்தங்களை வெளிப்படுத்துவதும் IMF நிபந்தனையாகும். 

ஆயினும் கூட, திட்ட ஒப்புதல்கள், அனுமதிகள், திட்ட கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்கள் போன்ற உட்கட்டமைப்பு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு முக்கியமான தகவல்களில் குறிப்பிடத்தக்க பங்கு பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது என்பதை மதிப்பீடு வெளிப்படுத்துகிறது.

உட்கட்டமைப்புத் திட்டங்களை சுற்றியுள்ள அரசாங்கத்தின் தொடர்ச்சியான வெளிப்படைத்தன்மை இல்லாததால், சட்டக் கட்டளைகளை மீறி, மூடிய கதவுகளுக்குப் பின்னால் அரசாங்கம் தனது வணிகத்தை தொடருமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

Visited 3 times, 1 visit(s) today

Last modified: April 29, 2024

Close