Written by 10:17 am Verité in the News Views: 3

செப்டம்பரில் ஐ.எம்.எப். திட்டத்தின் வெளிப்படைத்தன்மை அதன் மிகக் குறைந்த நிலையை எட்டியது : வெரிட்டே ரிசர்ச் 

Published by Virakesari

இலங்கை முக்கியமான வேலைத்திட்ட மைல்கற்களை தவறவிட்டதால், ‘வெளிப்படைத்தன்மையில் இரட்டைப் பற்றாக்குறையை’ ஆராய்ச்சி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்துடனான  இலங்கையின் 17வது திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 100 உறுதிமொழிகளைக் கண்காணிக்கும் இணையவழித் தளமான வெரிட்டே ரிசர்ச்சின் ‘ஐ.எம்.எப். கண்காணிப்பான்’இன் சமீபத்திய புதுப்பிப்பு, 2023 செப்டம்பர் இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 71 கண்காணிக்கக்கூடிய உறுதிமொழிகளில் 40ஐ மட்டுமே இலங்கை நிறைவேற்றியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.   

அதே நேரத்தில், மார்ச் மாதம் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய இரண்டிலும் இலங்கை அதன் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது என்பதையும் இது வெளிப்படுத்தியுள்ளது.   

ஏனெனில், செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்றப்படவேண்டிய உறுதிமொழிகளில் சுமார் 30% நிலை அறியப்படாத நிலையில் உள்ளது. மேலும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த அரசாங்கம் நிறைவேற்றியிருக்கவேண்டிய நான்கு உறுதிமொழிகளில் மூன்று நிறைவேற்றப்படவில்லை. 

சமீபத்திய தரவு இலங்கையின் IMF திட்டத்தில் “வெளிப்படைத்தன்மையில் இரட்டை பற்றாக்குறையை” வெளிப்படுத்துகிறது. இதில் (அ) திட்டத்தின் முன்னேற்றத்தில் பெருகிவரும் வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் (ஆ) அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை உயர்த்துவதை ஊக்குவிக்கும் IMF உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் பெருகிவரும் தோல்வி ஆகியவை அடங்கும். 

சர்வதேச நாணய நிதிய (IMF) திட்ட முன்னேற்றத்தில் அதிகரித்து வரும் வெளிப்படைத்தன்மையின்மை

அறியப்படாத உறுதிமொழிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 20%ஆக இருந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அது 30%ஆக உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் இந்த வெளிப்படைத்தன்மையின்மை இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் செயல்திறன் ஆகிய இரண்டிலும் பொது மற்றும் நிறுவன நம்பிக்கையை அழிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. 

அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க அழைப்பு விடுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அதிகரித்து வரும் தோல்வி 

நிர்வாகக் குழு அளவிலான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏழு மாதங்களில் வெளிப்படைத்தன்மையை கட்டாயமாக்கும் பெரும்பாலான தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. “வருவாய்கள், செலவுகள் மற்றும் நிதி ஆகியவற்றின் மாதாந்த பணப்புழக்கத்தை அடுத்த மாதத்தின் மூன்றாவது வணிக நாளுக்குள் அரச கணக்குகள் திணைக்களம் அறிக்கையிட வேண்டும்” என்ற உறுதிமொழி ஒரு சமீபத்திய உதாரணமாகும். இணையவழி நிதி வெளிப்படைத்தன்மை தளத்தை உருவாக்குவது மற்றொரு எடுத்துக்காட்டாகும். 

இது மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் செப்டம்பர் மாத இறுதியில் கூட அது நிறைவேற்றப்படவில்லை. அத்தகைய ஒரு தளத்தின் தேவை இலங்கைக்காக வெளியிடப்பட்ட நிர்வாக பகுப்பாய்வுகள் இரண்டிலும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. ஒன்று, இலங்கையின் சிவில் சமூகத்தால், மற்றொன்று சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டது. 

அரசாங்கத்தால் பூர்த்தி செய்யப்பட்ட ஒரே வெளிப்படையான உறுதிமொழி சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகையைக் கண்டறியும் அறிக்கையாகும். ஆனால், அதுவும் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டதே.

ஒரு ஜனநாயக கட்டமைப்புக்குள் வெளிப்படைத்தன்மை பொதுவான பொறுப்புக்கூறலின் அடித்தளத்தை உருவாக்குகிறது. எவ்வாறாயினும், IMF கண்காணிப்பானின் தரவுகள் இலங்கைக்கு வெளிப்படைத்தன்மையில் இரட்டைப் பற்றாக்குறை இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றன. அரசாங்கம் முதலில் அதன் பொறுப்புக்கூறல் குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால் இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதை இரண்டு நிர்வாக பகுப்பாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

இந்த மதிப்பீடுகள் துல்லியமாக இருந்தால், இரட்டை வெளிப்படைத்தன்மை பற்றாக்குறை எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார மீட்பு எதிர்பார்த்தபடி நிறைவேறாது என்பதற்கான முக்கிய குறிகாட்டியாக இருக்கலாம்.

IMF கண்காணிப்பான் என்பது 2023 மார்ச் 20 திகதியன்று அங்கீகரிக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் IMFக்கான இலங்கையின் விருப்பக் கடிதத்துடன் பதிவுசெய்யப்பட்டு இனங்காணப்பட்ட 100 உறுதிமொழிகளைக் கண்காணிக்கும் இலங்கையின் முதல் மற்றும் ஒரே தளமாகும். இதை manthri.lk இணையதளத்தினூடாக பொதுமக்கள் அணுகலாம். 

Visited 3 times, 1 visit(s) today

Last modified: April 29, 2024

Close